இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.
ஆதிகாலத்தில் மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில் அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல் விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக்கிறார்.
மேற்கத்தியர்கள் அறிவியலில் முன்னேறியதற்கு ஹராரி சொல்லும் காரணம் அவர்களின் மனோபாவம்.அதாவது தங்களுக்கு தெரிந்தவை குறைவு தெரியாதவையே மிகுதியெனும் மனோபாவம்.இது மற்ற தேசத்தவரிடம் இல்லாத ஒரு பண்பு.ஆனால் எனக்குத்தெரிந்த முக்கிய காரணம் மேற்கத்தியர்கள் கீழை நாடுகளில் செய்த அப்பட்டமான சுரண்டல்.அந்த சுரண்டல் வழி சேர்த்த செல்வமே அவர்களின் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் மூலதனம்.இதுவல்லாமல் அவர்கள் மனோபாவம்தான் காரணமென்றால் ஏன் கி.பி.1500 முன் அவர்களின் அறிவியல் முன்னேறவில்லை.அவர்களின் முன்னேற்றமெல்லாம் 1500க்கு பின்னர்தான்.
இந்த நூலில் ஹராரி மீண்டும் மீண்டும் சொல்லும் பொய்யென்பது இரண்டாம் உலகபோருக்குப்பின் உலகில் பெரியளவில் பிரச்சனையில்லை,உலகம் அமைதிப் பூங்காவாக உள்ளதென்பது.உண்மையில் அவ்வாறா உலகம் உள்ளது?என் நினைவிலிருந்தே பல போர்களை பட்டியலிடமுடியும்.இந்தியா-சீனா,இந்தியா-பாகிஸ்தான்,இலங்கை உள்நாட்டுபோர்,அமெரிக்கா-வியட்நாம்,அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது தொடுத்த யூத்தம்,அமெரிக்கா மீதே நடந்த 9/11 தாக்குதல்,ரஷ்யாவிற்கும் சுற்றியுள்ள நாடுகளுகுமான யுத்தம்,இஸ்ரேல் தினந்தோரும் நடத்திக் கொண்டிருக்கும் போர், எண்ணிலடங்கா தீவிரவாத செயல்கள், இவை எதுவும் நடக்காதது போலவும், ஐரோப்பா அமைதியாக இருந்தால் ஏதோ உலகமே அமைதியாகவே உள்ளது போலவும் ஹராரி எழுதியுள்ளார்.இதையெல்லாம் கேட்டால் பழங்காலத்தில் நடந்த வன்முறைகளை ஒப்பிடும் போது இவையெல்லாம் ஒன்றுமில்லை என்ற தேய்வழக்கே பதிலாகவரும்.
என்னதான் கம்யூனிசத்துடன் நமக்கு ஒவ்வாமையென்றாலும் , மனிதகுல வரலாற்றில் சோவியத் ரஷ்யா மிகமுக்கிய நிகழ்வு.ஆனால் அதை பற்றி இந்த நூலில் ஒரு வரி கூட எழுதவில்லை.
நூல் முழுக்க எந்த குறிப்பிட்ட மதத்தையும் தாக்காமல் எழுதியவர்,ஒரு அத்யாயத்தின் முதல் பக்கத்தில் அணுகுண்டு வெடிப்பின் படம் போட்டு அதற்கு கீழே பகவத்கீதையின் ஒரு சுலோகத்தை தந்திருக்கிறார்.ஏதோ அந்த சுலோகம்தான் ஓப்பன்ஹைமர் அணுகுண்டு வெடிக்க காரணம் என்பதைப் போல இந்த நாலிலும் சமீபத்தில் வந்த ஓப்பன்ஹைமர் திரைப்படத்திலும் காட்டியுள்ளனர்.ஐரோப்பாவின் வரலாறே இரத்தக்கரை படிந்த வரலாறுதான்.இந்தியாவில் தோன்றிய மதங்கள் ஒப்பீட்டளவில் சகிப்புத்தன்மையையே போதிக்கின்றன.இவ்வாறிருக்க எவனோ ஒருவன் உலகின் எந்த மூலையிலோ எதையோ வெடித்துவிட்டு,அதற்கு இந்திய மதத்தின் ஒரு சுலோகத்தோடு தொடர்புருத்துவது கேவலமான ஒரு செயல்.நூறு கோடி மக்கள் வழிபடும் சமயம் என்ற நாகரீகம் கருதியாவது ஹராரியும்,நோலனும் இதை தவிர்த்திருக்கலாம்.
உலகில் உள்ள பல நிகழ்கால பிரச்சனைகள் எவ்வாறு எதிர்காலத்தில் தீர்க்கப்படும் எனபது பற்றி பேசாமல்,மனித இனமே வேறொரு இனமாக மாறிவிடும் என்பன போன்ற பல பூச்சான்டிகளை காட்டி எங்கெங்கோ செல்கிறார்.மொத்தத்தில் நன்றாக எழுதப்பட்டு (அல்லது எடிட் செய்யப்பட்டு) சுவாரிஷ்யமாக இருந்தாலும், இது ஒரு பிரச்சாரக நூலாகவே எனக்கு தெரிகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக