காடன் விளி:
இந்த தொகுப்பில் மிகச் சிறந்த கதையென எனக்குப் படுவது இது தான்.விளி என்றால் அழைத்தல்.அதாவது காடனை அழைத்தல் என்பதே தலைப்பு.இந்த கதையை தந்தை வழி சமூகமான நமக்கு(தமிழ் மக்களுக்கு) புரிந்துகொள்ள அல்லது ஏற்றுக் கொள்ள சிறிது கடினமாக இருக்கலாம்.பெண்களின் காம தவிப்பை விவரிக்கும் கதையாகவே நான் புரிந்து கொள்கிறேன்.கதை சொல்லியான சிறுவன் வீட்டில் வேலை செய்யும் ஒருவர், ஏதோ நேர்ச்சைக்காக வெளியே(?) சென்றிருக்கும் போது,சிறுவனும் அவன் அப்பாவும் வீட்டிற்க்குள் தங்காமல், வெளியே உறங்குகிறார்கள்.எனக்கு தி.ஜா. எழுதிய அம்மா வந்தாள் தான் ஞாபகம் வந்தது.கதையின் முடிவில் காடன் மலையிலிருந்து பாறைகள் உருண்டு விழாததால் இது ஒரு பாவச் செயல் அல்ல என்பதாக புரிந்து கொள்ளலாம். எருமை மாட்டின் கூர்மையான மழுங்கிய கொம்பை பற்றிய விவரணை பலே :) !!
யட்சி:
இது முந்தைய கதையைப் போல் ஆழமான ஒன்றல்ல.சுமாராகத்தான் எனக்குப்பட்டது.பாட்டி, பேத்தி போன்ற சுதந்திர பெண்கள் அனைவருமே யட்சிகள் என்பதான சித்தரிப்பு.என்னை கவரவில்லை.
இரு கலைஞர்கள்:
எழுத்தாளர் ஜெயகாந்தனும் இளையராஜாவும் திருவண்ணாமலை சென்றுவிட்டு வரும் கதை.சுமாரான கதை.
திருமுகப்பில்:
ஒரு வருடத்திற்கு முன் நானும் என் தாயாரும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்கு சென்றிருந்தோம்.இந்த கதையை படித்த போது அங்கு சென்றதுதான் நினைவுக்கு வந்தது.காளிச்சரணும் ஜெயமோகனும் கண்டதை நான் இன்னும் காணவில்லை(என் தாயார் கண்டிருப்பார், பக்தி பரவசத்துடனேயே இருந்தார்).மீண்டும் செல்ல வேண்டும்.சுமாரான கதை.
காமரூபிணி:
காமரூபிணி என்றால் தன் விருப்பத்திற்கேற்ப பல ரூபங்களை எடுப்பவள்(சக்தி) என்று அர்த்தம்.தலைப்பிற்கேற்ப போல் இதில் பல விதமான பெண்கள்(யட்சிகள்) பற்றிய விவரணை.ஆனால் நான் கதை முழுமை கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். ஆனாலும் வள்ளியம்மை பற்றிய சித்தரிப்பு பிரமாதம்.
ஊமைச்செந்நாய்:
சிறந்த கதை.ஒரு ஆண்மையற்ற வெள்ளைக்கார துரையின் அடாவடி செயல்களும் அவன் கீழ் அடிமையாக வேலை செய்யும் இந்தியர்கள் பற்றியுமான கதை.வெள்ளைக்கார துரையின் தாழ்வுணர்ச்சிதான் யானையை கொல்வது வரை அவனை செலுத்துகிறது.இதை படித்தபின் ஜெயமோகனுக்கும் அ.முத்துலிங்கம் அவர்களுக்கும் இந்த கதை தொடர்பாக நடந்த உரையாடலை ஜெயமோகன் தளத்தில் படிக்க நேர்ந்தது.எனக்கு தோன்றிய அதே கேள்விகளை முத்துலிங்கம் அவர்களும் கேட்டிருந்ததும் மகிழ்ச்சி.
மத்தகம்:
கதையின் கடைசியிலிருந்தே புரிந்து கொள்ள முயல்கிறேன்.கேசவன் யானை பரமனை ஏன் மன்னித்து மத்தகத்தில் ஏற்றியது.பரமன் அருணாச்சலம் அண்ணனை கொன்று அவரது குடும்பத்தை காப்பாற்றாமல் இருந்திருந்தால் யானை மன்னித்திருக்காது.ஆனால் அவன் அண்ணனின் குடும்பத்தை காப்பாற்றுகிறான்.அவன் அவரது மனைவியிடம் சென்றது காமத்திற்காக அல்ல,அவர்களது குடும்பத்தை காப்பாற்றத்தான்.
ஆனால் அவன் அண்ணனை கொன்றது தவறல்லவா?அவன் அண்ணன் பழகும் பெண்ணிடம்(இலவங்காட்டு நீலம்மை) அவனும் சென்றது தவறல்லவா?அவள் முதலில் ஆசானோடு பழகியவள்.பின்னர் அருணாச்சலம்.பின்னர் பரமன்.ஆனால் அருணாச்சலம் அண்ணன் செய்வது தவறுதான்.அம்பிளியை அடைய அவர் அவனை கோவிலில் திருடச் சொல்கிறார்.அவன் முன்பே அப்படித்தான் திருடியதாக அவர்தான் சொல்கிறாரே தவிர, உண்மையில் அப்படித்தான் நடந்ததா என்பது கதையில் இல்லை.ஆக, அண்ணன் அவனை திருடச் சொல்வதும், பரமன் தன் மனைவியாக்க நினைக்கும் அம்பிளியை தான் அடைய நினைப்பதும் தவறுதான்.அண்ணனை கொன்றதை பரமன் செய்யவில்லையென்றால், யானையே செய்திருக்கும்.
நல்ல கதை.ஆனால் ஜெயமோகனின் கதைகள் அனைத்துமே விடுகதைக்கு விடையை கண்டுபிடிக்கும் குறியீடுகளின் தொகுப்பாக இருப்பதால் வாசிப்பின்பத்தை குறைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
மீண்டும் ஜெயமோகன் அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக