முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Freedom at Midnight - Larry Collins & Dominique Lapierre

                                    Amazon.fr - Freedom at Midnight - Collins, Larry, Lapierre, Dominique -  Livres    

        மவுண்ட்பேட்டன் கடைசி வைஸ்ராயாக பொருப்பேற்றதிலிருந்து(1947 தொடக்கம்) மஹாத்மா காந்தியின் மறைவுவரை இந்தியாவில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இந்த பத்தகம்.வெறும் இரண்டாண்டுகள்தான் என்றாலும்,இந்தியாவில் மிகப்பெரிய பல மாற்றங்கள் நடைபெற்ற காலம்.இந்திய சுதந்திரம்,இந்தியா பாகிஸ்தான் பிரிவினை,மஹாத்மா காந்தியடிகள் படுகொலை என பல முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த கொந்தளிப்பான காலகட்டம்.
        இங்கிலாந்து பிரதமர் க்ளமண்ட் அட்லி  மவுண்ட்பேட்டனை புதிய வைஸ்ராயாக நியமிக்கிறார்.அவரிடம் தரப்பட்ட பொருப்பு இந்தியாவிற்க்கு விரைவில் சுதந்திரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்.இது நடந்த்து 1947 தொடக்கம்.மவுண்ட்பேட்டன் தயக்கத்துடனேயே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.அதுவரை அவர் மத்திய ஆசியாவின் கப்பற்ப்படை தளபதியாக பொறுப்பேற்று சிறப்பான பெயர் பெற்றவர்.அவர் தயக்கத்திற்க்கு காரணம்,இங்கிலாந்தின் காலணியாதிக்கத்தை இந்தியாவில் முடிவுக்கு கொண்டுவந்தவரென்ற பெயரெடுக்க அவர் விரும்பவில்லை.மேலும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.இந்தப் புத்தகத்தில் சொல்லப்படாத,ஆனால் ஊகிக்ககூடிய ஒரு விஷயம்.இந்தியாவிற்க்கு சுதந்திரம் மட்டுமல்ல,இந்தியாவை இரண்டாக பிரிப்பதும் அவருக்கு கொடுக்கப்பட்ட கடமை.இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் தான் பொருப்பாக்கப்படுவதால்,தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் என நினைத்திருக்கலாம்.
        மவுண்ட்பேட்டன் இந்தியா வந்தவுடன் தன் வேலைகளை ஆரம்பிக்கிரார்.நேரு,காந்தி,படேல் மற்றும் ஜின்னா என ஒவ்வொரு தலைவர்களையாக சந்தித்து இந்த முறை நிச்சயமாக சுதந்திரம் வழங்கப்படும் என்று தெருவிக்கிறார்.
        முதலில் இந்த புத்தகத்தின்  நல்ல விஷயங்களைப் பார்ப்போம்.சிறு சிறு விஷயங்களையும் விடாமல் சுவாரிச்யமாக விவரித்து செல்கிறது.இந்த காலகட்டத்தின் அனைத்து stackholders பற்றியும் விரிவாக பதிவு செய்கிறது.தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரிச்யம் குறையாத மொழிநடை.இந்த புத்தகத்திற்க்காக விரிவான கள ஆய்வு செய்துள்ளது தெரிகிறது.
        ஆங்கிலேயர்கள் இந்தியாவை இரண்டாக பிரித்துத்தான் சுதந்திரம் வழங்க முடிவு செய்திருக்க வேண்டும்.அதுவே அவர்களது startegic interestக்கு நல்லதாக அமைந்திருக்கும்.ஆனால் இந்த புத்தகத்தில் ஏதோ   மவுண்ட்பேட்டன் கடைசி வரை ஒருங்கிணைந்த இந்தியாவையே விரும்புவதாகவும் ,ஜின்னா செய்த வற்புறுத்தலாலும், இந்து முஸ்லீம் மதச்சண்டையே இந்தியாவைப் பிரிக்க்க் காரணம் என்றும் நிருபிக்க முயல்கிறது.இந்து முஸ்லீம் பிரச்சனையினால் இந்தியா பரிக்கப்படவில்லை,இந்தியா பிரிக்கப்பட்டதே இந்து முஸ்லீம் மதப்பிரச்சனை மிகப் பெரிதாக வெடிக்க்க் காரணம்.700 ஆண்டு கால முகலாய ஆட்சி,200 ஆண்டு கால ஆங்கிலேய ஆட்சியில் இல்லாத மதப்பிரச்சனையா கடைசி 1947ல் வெடித்தது.முழுக்க முழுக்க ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்க்கு சுதந்திரம் கிடைக்கும் போது அது பிரிக்கப்பட வேண்டும் என்ற முடிவுடனேயே செயல்பட்டிருக்க வேண்டும்.இந்திய பிரிவினைக்கும் அதன் தொடர்ச்சியான மத கலவரங்களுக்கும்,சரித்திரத்திலேயே இல்லாத மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வுக்கும் முழுக்காரணம் ஆங்கிலேயரசும் அதன் கடைசி வைஸ்ராயும் தான்.ஆனால் இந்தப் புத்தகம் அவர்களை மனிதப் புனிதர்களாக சித்தரிக்கிரது.ஏதோ ஆங்கிலேயர்கள் வெளியேறினால் இந்திய துணைக்கண்டமே வெறிப்பிடித்து ஒருவரையொருவர் கொன்றுவிடுபவர்கள் போலவும் ஆங்கிலேய அரசாங்கம்தான் இந்த மிருகங்களை கட்டுப்படுத்தி வந்திருந்த்தாகவும்தான் இந்தப் புத்தகம் காட்டுகிறது.
        மஹாத்மா காந்தியின் மேல் மிகப்பெரிய மரியாதையும் அன்பும் கொண்டவன் நான்.பண்டைய பாரதத்தின் பண்பாட்டு தொடர்ச்சியாகவே அவரைப் பார்க்கிறேன்.அவருடைய மனிதநேயம்,சாத்வீகப்பண்புகள் யாவும் எனக்கு உடன்பாடானவை.நுகர்வு வெறிப்பிடித்து அலையும் இந்த உலகிற்க்கு காந்தியிடமிருந்துதான் மீட்பு கிடைக்கும் என்று நம்புபவன் நான்.ஆனால் அவரால்தான் ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.முதல் மற்றும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இனிமேலும் காலணியாதிக்கம் சாத்தியமில்லை என்பதை ஆங்கிலேயர்கள் உணர்ந்ததே இந்திய சுதந்திரத்திற்க்கு பிரதான காரணம்.காந்தியடிகள் மற்றும் மற்ற தலைவர்களின் போராட்டம் மக்களை ஒருங்கிணைத்தது மற்றும் எழுச்சியை ஏற்படுத்தியது என்பது உண்மையே.ஆனால் அதற்கு பயந்துதான் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் தந்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை.ஆனால் இந்தப் புத்தகம் அதையே திரும்பத்திரும்ப சொல்கிறது.இதைப் படிக்கும் போது ஏதோ வஞ்சப் புகழ்ச்சியாகப் படுகிறது.
        ஏதோ காந்தியை புகழ்கிறார்களே என்று நினைத்தால்,அதுவும் இல்லை.காந்தி டெல்லியில் இருக்கும் போது,தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே தங்கியிருக்கிறார்.ஆனால் இதை மட்டும் சொல்லாமல் விஜயலட்சுமிப் பண்டிட் சொன்னதாக தேவையில்லாமல் ஒரு செய்தியை திணிக்கிறார்கள்.காந்தி அங்கு தங்கியிருக்கும் போது அவருக்கு தெரியாமல் 10,15 காங்கிரஸ்காரர்கள் அவர் குடிலைச் சுற்றி தங்கியிருந்த்தாகவும் ,காந்தியின் எளிமைக்காக காங்கிரஸ் நிறைய செலவு செய்வதாகவும்  இந்த புத்தகத்தில் உள்ளது.இது உண்மையோ பொய்யோ இந்த புத்தகத்துக்கு தேவையில்லாதது.இது நன்நோக்கத்துடன் எழதப்பட்டதாகத் தெரியவில்லை.
        என்னதான் சமஸ்த்தான மன்னர்கள் சுதந்திறத்திற்க்குப்பின் இல்லையென்றாலும், ஒரு அடிப்படை மரியாதை தந்திருக்கலாம்.அவர்களை எவ்வளவு கேவலம் செய்ய முடியுமோ அவ்வளவு கேவலம் செய்திருக்கிறார்கள்.எனக்கு அந்த மன்னர்கள் மேல் எந்த பற்றும் இல்லை.ஆனால் அவர்கள் கேலி செய்வது அந்த மன்னர்களை மட்டுமல்ல.அவர்கள் மூலம் பழைய இந்தியாவையே கேலி செய்கிறார்கள்.ஏதோ இங்கிலாந்திலோ அல்லது மேலை நாடுகளிலோ அங்கிருக்கும் மன்னர்கள் செய்யாததையா இங்குள்ளவர்கள் செய்திருப்பார்கள்.மன்னர் என்றாலே எல்லா கீழ்மையையும் செய்திருப்பார்கள்,அனுபவித்திருப்பார்கள்.ஆனால் அது மட்டுமேதான் அத்தனை மன்னர்களும் என்பதைப் போல் சித்தரிக்கிறார்கள்.ஆனால் ஒன்று.200 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சிக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல்(சில விதி விலக்குகள் தவிர்த்து) அவர்களுடன் ஒத்துப்போன அந்த மன்னர்களுக்கு இது வேண்டும்.இந்தியாவில் தற்போது எந்த சுயசிந்தனையும் இல்லாமல் அடிமை புத்தியுடன் தாழ்வு மனப்பான்மையுடன்  இந்தியர்கள் இருப்பதற்க்கு காரணமான 200 ஆண்டு கால ஆங்கிலேய ஆட்சிக்கு துணைபோன இந்த சமஸ்த்தான மன்னர்களுக்கு இந்த அவமானம் தேவைதான்.ஆனால் அதை ஆங்கிலேயர்கள் செய்யக் கூடாது.நாம் தான் செய்ய வேண்டும்.
        இந்தியாவிற்க்கு சுதந்திரம் கொடுத்தபிறகு அவனே செல்லும்போது , விடாப்பிடியாக அவனைப் பிடித்து அவனுக்கு முதல் கவர்னர் ஜென்ரல் பதவி எதற்கு கொடுக்கவேண்டும்.வேறு எந்த நாட்டிலாவது இந்த கொடுமை நடக்குமா?அதன் விளைவு நேருவும் படேலும் அசிங்கப்படுவதுதான்.இந்திய சுதந்திறத்திற்க்குப் பிறகு ,இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்களின் போது நேருவும் படேலும் அதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் முதல் கவர்னர் ஜென்ரலாக இருந்த மவுண்ட் பேட்டனை அணுகி 'எங்களுக்கு தேசம் அமைதியாக இருக்கும் போது  தான் ஆளத் தெரியும்.இந்த வன்முறையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.எங்களால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை.நீங்கள்தான் இது போன்ற சமயங்களில் நல்ல நிர்வாகிகள்.நீங்களே அதிகாரம் எடுத்துக்கொண்டு நிலைமையை சரிசெய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டதாகவும்,அதற்கு மவுண்ட்பேட்டன் 'சுதந்திரம் வழங்கியப பிறகு நான் ஆட்சியில் தலையிடுவது நல்லதல்ல.வேண்டுமானால் நான் பின்னிருந்து  ஆட்சி செய்கிறேன்.நீங்கள் முகமாக செயல்படுங்கள்' என்று சொன்னதாகவும் அதனால் வன்முறை கட்டுக்குள் வந்ததாகவும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.எனக்கென்னவோ இது நடந்திருக்கும் என்றுதான் தெரிகிறது.இந்தப் பத்தகத்தின் ஆசிரியர் இந்த புத்தகத்திற்க்காக மவுண்ட்பேட்டனுடன்  நீண்டநேரம் பேசியிருக்கிறார்.இதை அவர்தான் சொல்லியிருக்க கூடும்.நேருவும் படேலும் உயிருடன் இல்லாதபோது இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது(1975).நேரு,படேல்,மவுண்ட்பேட்டன் என்று மூன்று பேருக்குள் நடந்தவொரு சம்பவம் ,இப்படி அனைவருக்கும் தெரியும்வண்ணம் இந்த பத்தகத்தில் வரக் காரணம்,மவுண்ட்பேட்டனை ஏன் கவர்னர்ஜென்ரலாக நியமிக்க வேண்டும்?சுதந்திரம் கொடுத்தவுடன் அனுப்ப வேண்டியதுதானே அவரை.
        இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் ,சமஸ்தானங்களை ஒருங்கினைக்கும்போது காஷ்மீர்,ஜூனாகட் மற்றும் ஹைதராபாத்  சமஸ்தானங்கள் மட்டும் இந்தியாவுடன் சேர மறுக்கின்றன.இதில் மற்ற இரு சமஸ்தானங்களை விட காஷ்மீர் மட்டும் பிரச்சனையாக மாறுகிறது.இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு உரிமை கோருகின்றன.ஒருங்கிணைந்த இந்தியாவையே தான் விரும்பியதாகவும், முஸ்லீம்லீக்  வற்ப்புருத்தலாலேதான் இந்தியா பிரிக்கப்பட்டதாகவும் சொன்ன மவுண்ட்பேட்டன்,காஷ்மீர் பிரச்சனையின் போது அதை ஐநாவிற்க்கு கொண்டுசெல்ல அறிவுருத்தியிருக்கிறார்.அதை கேட்டு நேருவும் காஷ்மீர் பிரச்சனையை ஐநா கொண்டுசென்றுள்ளார்.மெத்தப் படித்த நேருவும் இதன் விளைவுகள் என்ன என்ற தொலைநோக்கு பார்வைஇல்லாமல் கண்மூடித்தனமாக மவுண்ட்பேட்டன் அறிவுரையை ஏற்றுக் கொண்டது இந்தியாவின் துரதிஷ்டமே.
    புத்தகத்தின் இறுதியில் காந்தி கொலை திட்டமிடல்,நாதுராம் கோட்சே பற்றியப் பகுதி ஒரு விருவிரு திரைப்படம் போல செல்கிறது.இந்தியப் பிரிவினைக்கு முதல் எதிரி காந்தி.Partition will be on my dead body என்று சொன்னவர் காந்தி.காந்தி கடைசி வரை பிரிவினையை எதிர்த்தவர்.பிரிவினையினால் ஏற்படப்போகும் விபரீதங்களை முன்கூட்டியை நன்கு அறிந்தவர்.பிரிவினைக்குப்பின் மத வெறி உச்சத்தில் இருந்தது.இரு பக்கமும் வன்முறை வெடித்த்து.அது நடக்கும்போது  இந்தியாவில் வன்முறையை குறைக்கும் பொருட்டு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் காந்தி செய்தார்.ஏதோ பிரிவினைக்கே காந்திதான் காரணம் என்பதுபொல,எந்த சகிப்புணர்வும் இல்லாமல் அவரை படுகொலை செய்தது மோசமான பயங்கரவாத செயல்.அதை விருவிருப்புடன் இந்த பத்தகம் பதிவு செய்துள்ளது.
        ஜின்னா கடைசிவரை ஒரு statesmanஆ இருக்கவே இல்லை.காந்தி மறைவின்போது வெளியிட்ட மறைவுச்செய்தியில் 'காந்தி ஒரு நல்ல ஹிந்து' என்பதாக எழுதியிருக்கிறார்.அவருடைய உதவியாளர் காந்தி மததிற்க்கும் மேலானவர்,மனித நேயர் ,இந்து மத அடையாளத்திற்குள் மட்டும் அவரை சுருக்கி விட முடியாது என்று குறிப்பிட்போதும் ,தான் எழுதியதே இருக்கட்டும் என்று அதையே வெளியிட்டிருக்கிறார்.இந்த புத்தகத்தில் உள்ள மற்றுமொரு கேலி,இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இரு நாடுகளும் பங்கிட்ட பொருட்களாக மேஜை,நாற்காலி,பேனா,பென்சில் என்றுள்ளது.சோவியத்ரஷ்யா உடைந்தபோது ரஷ்யாவும் உக்ரைனும் பங்கிட்டவை அணுவுலைகள்,தொழிற்ச்சாலைகள்,ராணுவ தளவாடங்கள்.70 ஆண்டுகால சோவியத்ரஷ்யாவால் உக்ரைனிடம் இவ்வளவு பங்கிட முடியுமென்றால் 200 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் அவர்கள் விட்டுச் சென்றது பேனாவும் பென்சிலும்தான்.இதற்கு நாண வேண்டியது ஆங்கிலேயர்கள்தான்,இந்தியாவோ பாகிஸ்தானோ அல்ல.
        இறுதியாக இந்தப் புத்தகம் முழுக்கமுழுக்க மேற்கத்தீயர்களுக்காக எழுதப்பட்டுள்ளது.இதை படிக்கும் எந்தவொரு ஆங்கிலேயருக்கும் காலனிய ஆதிக்கத்திற்க்காக சிறிது கூட குற்றவுணர்ச்சி ஏற்படாது.மாறாக இந்திய காட்டுமிராண்டிகளை நாகரீகப்படுத்திய மேலோர்களாகவே தங்களை கருதிக்கொள்வார்கள்.இந்தப் பத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்,மேற்கூறிய சிந்தனைகளையும் கருத்தில்கொண்டு.             

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெயமோகன் குறுநாவல்கள்

                         கிளிக்காலம்:          ஒரு விடலைச்சிறுவன் பெரியவனாகும் கதை.ஜெயமோகன் தரத்தில் இது சுமார் கதை.ஆனால் இதிலும் நல்ல விவரணை.கதை களத்தை கண்முன் காட்டும்படி விவரித்திருக்கிறார். பூமியின் முத்திரைகள்:          இது சுமாரான கதை.நண்பனின் இறப்பை ஒட்டி அவன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.இதில் வரும் விவரணைகள் எதுவும் கவரவில்லை.      மடம்:         இது முழுக்க முழுக்க கிண்டல்.இதில் மடத்தின் குருவையோ , குருவிற்க்கு அடுத்ததாக வரும் பண்டாரத்தையோ கிண்டல் செய்யவில்லை.கிண்டல் முழுக்க கனபாடிகளைத்தான்.தமிழ்நாட்டில் திராவிட கழகங்கள் இல்லாத நிலையில் இக்கதை சுவாரிஸ்யமாக இருந்திருக்கும்.ஆனால் இங்கு நாளொரு மேனியும் இதே போன்ற பிரச்சாரம் இருப்பதால் இந்த கதை ஈர்ப்புடையதாக இல்லை. லங்காதகனம்:          கதையின் போக்கு முதலிலிருந்தே ஊகிக்க கூடியதாக இருந்தது.மடத்தின் விவரிப்...

White Mughals - William Dalrymple

                 பதினெட்டாம் நாற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய அதிகாரிக்கும்(ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்) இந்திய முகலாய ஆளும் வர்க பெண்ணுக்கும்  (கைர்-உன்-நிசா பேகமமுடன்) இடையிலான காதலை முன் வைத்து எழுதப்பட்ட வரலாற்று நூல்.White Mughals என்றால் இந்திய முகலாய மூஸ்லீம் பெண்களை மணந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில அதிகாரிகள்.இவர்கள் மற்றைய ஆங்கில அதிகாரிகளை போல் சுரண்டல் ஒன்றையே குறிக்கோளாக கொள்ளாமல் இந்தியாவை கொஞ்சம் அனுதாபத்தோடு அணுகியுள்ளனர்.இப்படிபட்ட சிலபல அதிகாரிகளில் ஒருவர் ஜேம்ஸ் கிரிக்பட்ரிக்.      இந்த நூலின் நல்ல விஷயமென்பது நாம் White Mughals பற்றி மட்டும் தெரிந்து கொள்ளவில்லை.18ம் நூற்றாண்டில் எவ்வாறு முகலாய அரசுகள் இயங்கின என்பதைப் பற்றியும் ,ஹைதராபாத் நகரின் வரலாறு பற்றியும் விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.       William Dalrymple தனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்நாலை சுவாரிஷ்யமாக  எழுதியுள்ளார்.ஆனால் White M...

Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari

                     இது நான் மிகுந்த ஆவலுடன் படிக்கத் துவங்கிய நூல்.ஆனால் படித்து முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது.ஹராரி ஒரு பிரசாரகர்(propagandist).காலனியாதிக்கம்,முதலாளித்துவம்,மேற்கத்திய மேட்டிமைவாதம் இவைகளின் பிரசாரகர்.இந்த நூலில் எனக்கிருந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிடுகிறேன்.               ஆதிகாலத்தில்  மனிதன் அமெரிக்காவிற்க்கும், ஆஸ்திரேலியாவிற்க்கும் முதன்முதலில் குடியேறிய நாட்களில்  அங்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் ஊகங்களே(எ.கா.பெரும்பான்மையான அரிய வகை விலங்குகளை கொன்றொழித்தது).அதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை.ஆனால் ஹராரி எல்லாவற்றையும் விலாவாரியாக ஏதோ நேரில் பார்த்தவர் போல்  விவரிக்கிறார்.ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது நூலின் பிற்பகுதியை படிக்கும் போதுதான் புரிகிறது.மேற்கத்தியர்கள் காலனியாதிக்கதின் போது அவர்கள் செய்த கொடுஞ்செயல்களை ஆதிகால பழங்குடியினர் செய்த செயல்களோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என உணர்த்தத்தான் அவ்வாறு எழுதியிருக...