இரவு - ஜெயமோகன்

           பகலின் இடைவேளையை தவிர்த்தால் இரவுதான் தொடர்ச்சியானது.இரவே உண்மை வெளிப்படும் வெளி.பகலில் உண்மை மீது வெளிச்சம் எனும் போர்வை மூடப்பட்டு பாசாங்குகளே வெளிப்படுகின்றன.உண்மையை தாங்க முடியாத எளிய உள்ளங்களின் உலகமே பகல்.உண்மையை கண்டு அஞ்சாமல் , பகலின் பாசாங்குதனத்தில் வாழ முடியாதவர்களின் உலகமே இரவு.இரவிலேயே அழகு கூர் கொள்ளும்.மேற்சொன்னவற்றையே மையமாக வைத்து ஒரு புது அனுபத்தை ஒரு நாவலாக தந்திருக்கிறார் ஆசிரியர்.ஜெயமோகனின் மிகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.

                                                        
       ஒரு அந்நியரான சரவணனை எப்படி முதல் சந்திப்பிலேயே மேனன் தம்பதியினர் அவ்வளவு அந்யோந்யமாக ஏற்று அவருக்கு பெண் பார்க்குமளவிற்கு செல்வார்கள் என்ற  நெருடல் முதலில் இருந்தாலும் , போகப்போக நாவல் பயனித்த தளமும் வேகமும் அந்த நெருடலை ஒன்றுமில்லாது செய்துவிட்டன.
         ஜெயமோகனின் மற்ற நாவல்களைப் போலவே இதிலும்  எளிய மனிதர்களே இயற்கையை   முழுமையாக புரிந்து கொண்டவர்கள் என்ற வகைமையிலேயே  கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.தோமா மற்றும் படகோட்டிகள் முழுமையாக இரவுலகில் வாழ்கிறார்கள்.மேனன், முகர்ஜி போன்ற மேல்தட்டு மக்கள்  பேசிப்பேசி அதில் உள்ள கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு இரவுலகில் வாழ்கிறார்கள்.எந்தப் போரிலும் ஈடுபடாமல் இராணுவத்திலிருந்து ஒய்வு பெறுவதைப்போல வாழ்கையில் எந்த சிக்கல்களையும் சந்திக்காதவர்கள்,ஒரு பெரிய உண்மை அறையும் போது அதை தாங்க முடியாமல் மீண்டும் பகலுலகிற்கே வந்துவிடுகிறார்கள்.
         நீலிமா கதாபாத்திரம் முதலிலிருந்தே அப்பட்டமான உண்மையுடனே காட்டப்படுகிறார்.அவருக்கு இருக்கும் தீவிர காமவெறியை அவர் மறைக்கவில்லை.அதே போல் ஃபாதர் கதாபாத்திர சித்தரிப்பும் சிறப்பு.ஜெயமோகன்  எர்னாகுளத்தையும் காயலையும் வார்த்தைகளினாலேயே வரைந்து காட்டுகிறார்.நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இரவைப் பற்றிய குருங்கவிதை மிகச்சிறப்பு.
         ஒரு நாவலை படித்தவுடன் ஏதேனும் சிறு மாற்றம் கருத்தளவில் அல்லது கற்பனையில் ஏற்பட்டாலே அந்த நாவலின் வெற்றி எனலாம்.இனி இரவில் ஆள் நடமாட்டம் தெரிந்தால் பயப்படுவதை விட இரவுலகவாசி என்ற பிரமிப்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
         சில மாதங்களுக்குமுன்  ஜெயமோகன் எழுதிய உலோகம் குறு நாவலை படித்தேன்.அந்நாவல் அவ்வளவாக என்னை கவரவில்லை.ஜெயமோகன் எழுதிய நாவல்களை வரிசைப் படுத்தினால் உலோகம் நாவலை கடைசியில் தான்  வைப்பேன்.இரவு நாவலை முதல் இடத்தில் வைப்பேன்.ஆனால் முதலிடத்திலேயே அவரது பல நாவல்களை வைக்கவேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக