கோகினூர் வைரத்தைப் பற்றிய முழுத் தகவல்களும் விரிவாக பதிவு செய்யப்பட்ட நூல். அந்த வைரத்தை வைத்திருந்த மன்னர்கள் மற்றும் மன்னர்களின் வாரிசுகளின் போர் வெற்றிகள், அவர்களின் கோரமான முடிவுகள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.நிச்சயமாக அந்த காலத்தில் சாதாரண குடிமக்கள் மன்னர்களை விட நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்.மன்னர் குடும்பங்களில் எவ்வளவு கொலைகள், எவ்வளவு முதுகு குத்தல்கள்.
இந்திய புராணங்களிலேயே கோகினூர் போன்ற வைரங்களைப் பற்றிய செய்திகள் கொட்டிக்கிடந்தாலும் ,ஆதாரபூர்வமாக கோகினூர் பற்றிய தகவல்கள் முகலாய மன்னர் முகமது ஷா ரங்கீலா உருவாக்கிய மயிலாசனத்திலிருந்துதான் (Peacock Throne) ஆரம்பமாகிறது.டெல்லியிலிருந்து நாதிர் ஷா மூலம் ஈரான் செல்கிறது.ஈரானிலிருந்து அகமது ஷா துரானி மூலம் ஆப்கான் செல்கிறது.ஆப்கானிலிருந்து ரஞ்ஜித் சிங் மூலம் பஞ்சாப்(அன்றைய ஒருங்கிணைந்த பஞ்சாப்) வருகிறது.பஞ்சாப்பிலிருந்து நேராக இலண்டன் செல்கிறது.இன்று வரை 170 ஆண்டுகளாக அங்கேயே உள்ளது.இதில் நாதிர் ஷாவும் அகமது ஷா துரானியும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல.இவர்களின் சித்தரிப்பு சரியே.ஆனாலும் இதுமாதிரியான வரலாற்று நூல்களில் ஆங்கிலேயர்களைப் பற்றி விவரிக்கும் முன் அதற்கு முந்தைய அரசுகளை கொடூரமாக சித்தரிப்பதன் மூலம் வாசகர்கள் ஆங்கிலேயர்களைப் பற்றி படிக்கும் போது இயல்பாகவே ஆங்கிலேயர்களை நாதிர் ஷாகளுடனும், துரானிகளுடனும் ஒப்பிட்டு ஆங்கிலேயர்கள் எவ்வளவோ தேவலை என்ற எண்ணம் ஏற்படும்.அதற்குத் தான் அப்படி சித்தரிக்கிறார்களோ என்று ஐயுர இடமுள்ளது.
எல்லாவற்றையும் துல்லியமாக விவரிக்கும் Dalrymple இங்கிலாந்து இராணி பற்றி விவரிக்கும் போது மட்டும் அவரைப் போன்ற தாயுள்ளம் கொண்டவர்கள் யாருமே இல்லை என்பது மாதிரியான விவரிப்புகள்.ரஞ்ஜித் சிங்கின் மகன் துலிப் சிங் கைதானதிலிருந்து அவரை தன் சொந்த மகனைப்போல் நினைத்ததாகவும் அவர் தன் சொந்த கையால் கோகினூரை தான் பெரும் வரை குற்ற உணர்ச்சியில் இருந்ததாகவும் தமிழ் திரைப்பட இயக்குனர் விக்ரமனே வியக்கும்படியான நெகிழ்ச்சியான சித்தரிப்பு.
எனக்கென்னவோ இங்கிலாந்து அரசு கோகினூரை இந்தியாவிற்கு தந்துவிடுவார்கள் என்றுதான் நம்புகிறேன்.அவர்களுக்கு அதன் மேல் அவர்கள் வெளிகாட்டிக் கொள்ளும் அளவுக்கு ஈடுபாடு உண்டா என்று சந்தேகமாக உள்ளது.மேலும் பல ஐரோப்பிய நாடுகள் தங்களது காலனியாதிக்கத்தின் போது எடுத்துச் சென்ற பல கலைப்பொருட்களை அதன் சொந்த நாட்டிற்கே திருப்பி தந்துகொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் கோகினூரையும் தரலாம்.அவ்வாறு தரும் பட்சத்தில் அதை நேராக பூரி ஜெகன்நாதருக்கே தந்துவிடுவது சாலச்சிறந்தது.
எப்படியிருந்தாலும் இந்த நூலைப் படிக்கக் காரணம் Dalrymple(மற்றும் Anita Anandh) அவர்களின் விருவிருப்பான மொழிநடை.வரலாற்று தகவல்களை ஒரு நாவல் மாதிரியாக கட்டமைத்துள்ள நுணுக்கம்.கோகினூர் பற்றிய என் ஆவல்.அந்த வகையில் இந்த நூல் ஒரு சிறப்பான படைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக